Wednesday 21 December 2011

ஏமாறாதே மழையே (புதன்கிழமை)

மழைக்கால அதிகாலையில்,
ஏஸியின் குளிருக்கும்,
போர்வையின் கதகதப்பிற்கும்
நடந்த போட்டியின் முடிவு வேண்டி
படுத்தே இருந்தவனின் போர்வையை
விலக்கிப் புன்னகைக்கும் தேவதை.

அலுவலகம் கிளம்ப வேண்டுமே
என பதறி எழ "லீவு தானப்பா"
சொன்னவள் சத்தியமாய் தேவதையே.
"பக்ரீத்தை"க் கண்டுபிடித்தவன் வாழ்க!
உலகோர் பக்ரீத்தை அடிக்கடி கொண்டாடுக!

அதிகாலை மழையின் ரம்யத்தில்
"மிங்" வம்ச சைனாவாய் திருவில்லிக்கேனி.

பலகனி அமர்ந்து மழை ரசிக்கையில்
"பாரோ" மன்னன் போன்றோர் உணர்வு.

"என்னப்பா ட்ரீமிங்கா " கேட்டவள்
தேநீர் கொடுத்து வாய்பேசாது
புருவம் விரித்தாள் அகலமாய்.

அவள் மழையை ரசிக்க நான் அவளை.

முத்தம் கொடுத்துச் சிரிக்கும் மகவு
மிட்டாய்ப் பார்த்து மகிழும் குழந்தை
பட்டுப்பூச்சி ரசிக்கும் சிறுமி என
முப்பரிமானத்தில் என்னவள்.
இவள் ரசிப்பதற்காகவே மழை வேண்டும்.

நாசியின் நுனியில் தெறித்தது மழையின் துளி.
அந்த நொடியில் அவளின் சிரிப்பு
என்வாழ்வின் மொத்த சம்பாத்யம்

வாரநடுவில், புதன்கிழமையில்,
விடுமுறையன்று பெய்த மழையில்
சிறுமியாய் தெரிகிறாள் என் தேவதை.

தேவதை அவள்ரசிக்க சின்னதாய் ஓர்மழை
அவளின் சிரிப்பிற்கு ஜம்மென்று ஓர்மழை
பித்தனாய் எனைமாற்றும் வித்தைக்கு ஓர்மழை
நித்தமும் மூன்றுமுறை மழைபெய்ய வேனுமே.

மொட்டைமாடியில் மழையில்நனைகையில்
சட்டென்று மழைநிற்க அப்பார்ட்மென்ட்
குழந்தைகளுடன் வாடிய அவள்முகத்தில்
தெரிந்தது ஐந்து வயதுச்சிறுமியின் ஏக்கம்

ஏக்கம் உணர்ந்து கொட்டிய மழையை
ஊரே தூற்றியது.
நான் மட்டும் தான்......


அவள் மேனிதழுவிய சுகமறிந்து
நித்தம் அந்தச் சுகம்வேண்டி
அவள் தரிசனத்திற்காகத்தான்
பெய்கிறது சென்னையிலும் மழை.

ஒருமுறை தழுவிய திருட்டு மழைக்கு
மறுமுறை வாய்ப்பளிக்கவில்லை தேவதை
வருவாள் அவள்மறுபடி என்ற நம்பிக்கையில்
பொழிகிறது, பாவம் அப்பாவி மழை.

ஏமாறாதே மழையே! நித்தமும் பெய்து.
ஏமாறாதே மழையே! நித்தமும்வந்து
என்னவள் எப்பொழுதுதாவது தான்
உன்னை ரசிப்பாள்.
அவள் நித்தமும் ரசிப்பதற்கும்
அவளை ஒவ்வொரு நொடியும் ரசிப்பதற்கும்
அருகிலேயே நானிருக்கிறேன்.

No comments:

Post a Comment