Wednesday 21 December 2011

எந்நேரமும் காதல் காலை மாலை ராத்திரி (மாலை)

விடுமுறை நாட்களின் அழையா
விருந்தாளியான மதிய உறக்கம்
களைந்து எழுந்து சோம்பல் முறிக்கும்
என் தேவதையால் மின்னிடும் மாலைப் பொழுது.

உறங்கிக் களைத்த முகத்துடன்
"வீக்லி 2 சன்டேஸ் வந்தா நல்லாருக்கும்ல"
எனக் கேட்டுச் சிரிக்கும் என் தேவதையின் புன்னகை
என்னைக் கால தேச வர்த்தமானங்கள்
கடந்த ஓர் பேரின்பப் பெருவெளிக்கு அழைத்துச் செல்லும்

"மூவி போலாமா ப்ளீஸ்" எனக் கேட்கும் நொடியில்
என் தேவதை பார்க்கும் கெஞ்சல் பார்வையில்
போகோ சாணல் மாற்றச் சொல்லிக் கேட்கும்
5 வயதுச் சிறுமியின் சாயல்

ஓகே சொல்லி தலையசைத்ததும் அவள்
முகம் காட்டும் சந்தோஷ ரேகைகள்
தீர்க்கமாக்குகின்றன என் ஆயுள் ரேகைகளை.

எத்தனை முறை சென்றாலும்
அலுப்பதே இல்லை கடற்கரையும்
கடற்கரை மணலும் கடலின் அலையும்
அருகே இருக்கும் என் தேவதையால்

கடலின் அலைகளில் ஒடிப்பிடித்து
விளையாடும் குழந்தைகளைக் கண்டதும்
"நம்ம குழந்தயா இருக்கப்பவே
கல்யாணம் பண்ணிருக்கலாம்ல ப்ச்
இப்ப நம்மளால பாக்க மட்டும் தான் முடியுது"
எனும் என் தேவதையின் ஏக்கம்,
குழந்தைத் திருமணத்தைத் தடை
செய்தவனைத் தேடிப் பிடித்துத் தூக்கில்
போடச் சொல்லி வெறியேற்றும்.

கடற்கரைக் காற்றில் அலையும் கூந்தலை
என் தேவதை கோதும் லாவகம்
சத்தியமாய்ப் பயிற்சி வேண்டும்.

மிளகாய் பஜ்ஜி கடித்த நொடியில்
இருகண்மூடி தோள்கள் உயர்த்தி
ஸ்ஸ்ஸ்ஸ் என்று எழுப்பும் சங்கீதம்
என் அடிமனதில் தேங்கி நிற்கும்
அடுத்த சங்கீதம் கேட்கும் வரை.

இத்தனை தான் என வரம்புகள் நில்லா
எத்தனையோ ரம்யமான நினைவுகள்
இவைகள் போதும் என் வாழ்வில்
ஒவ்வொரும் மாலையும் பொன்மாலையே

பெண்வடிவத் தேவதை அருகிருக்க
பெண்மாலை அவளை நான் அருகிருந்து ரசிக்கும்
ஒவ்வொரு மாலையும் பொன்மாலையே.

No comments:

Post a Comment